சிறிய ரோபோ... பெரிய உதவி...





மனிதனின் இரத்தக் குழாய்களுக்குள் நீந்திச் செல்லும் நுண்ணிய ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பலகலைக்கழக நுண் பெளதிகம் மற்றும் நானோ பெளதிக ஆய்வுக்கூடத்தில் இந்த ரோபோக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இரத்தக்குழாய் அடைப்புகளின் காரணமாக செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்குமாம். இரத்தக் குழாய்களுக்குள் ஊசிமூலம் இந்த ரோபோக்களை செலுத்தி செயல்பட வைக்க இயலும். ஒரு மில்லிமீட்டரில் கால்பங்கு பெரியதான இந்த
ரோபோக்களை piezoelectricityஐப் பயன்படுத்தி இயங்கச் செய்ய முடியும் என்கிறார்கள் நுண் எந்திரவியல் மற்றும் நுண் பொறியியல் அறிஞர்கள்.

சி
லவகையான படிகங்கள், பீங்கான்கள் இவற்றின் மீது அழுத்தம் கொடுக்கும்போது மின்னோட்டம் தூண்டப்படுகிறது என்பதுதான் piezoelectricity தத்துவம். இந்த தத்துவத்தை பயன்படுத்தியே நம்முடைய வீட்டில் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும் கேஸ் லைட்டர்களை இயக்குகிறோம். அறுவை சிகிச்சைகளில் சாதாரணமாக catheters எனப்படும் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உண்டாக்கும் காயங்களும் தழும்புகளும் பெரிய அளவில் இருக்கும்.

மேலும் நுண்ணிய பகுதிகளை இந்த catheter குழாய்கள் சென்றடைய முடிவதில்லை. இனிமேல் இதுபோன்ற நுணுக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு இந்த நுண்ணிய ரோபோக்கள் பயன்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


- மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

வாயில் வாழும் பாக்டீரியாக்கள்



நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா?

ஆம். அதுதான் உண்மை. உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும்
உலகின் வேறொரு பகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. மனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக்களைப் பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. செல்லின் முக்கியமான பகுதிப்பொருளாகிய ரிபோசோம்களில் உள்ள 16S rRNA ஜீன்களில் புதைந்துள்ள ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வுகளை ஸ்டோன்கிங் குழுவினர் தற்போது நடத்திவருகின்றனர்.

வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே உள்ள வேறுபாடுகளையும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது. உணவு, கலாச்சாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார்.

உமிழ்நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்கவைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமில்லையா? நம்முடைய பிள்ளைகள் கைசுத்தமாகவும், வாய்சுத்தமாகவும் வாழவேண்டியது அதைவிட முக்கியமில்லையா?


இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/02/090226210033.htm